Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, March 1, 2011

மலேசியா வாசுதேவன் பாடல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.





தமிழகத்தின் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை தன் கீத குரலால் தமிழ் மக்களை தன் வசம் இறுக்கி வைத்திருந்தவர் பாடகர் மலேசியா வாசுதேவன்.அவரின் கீத குரல்க்கு இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
1944ல் மலேசியாவில் பிறந்த வாசுதேவன் அங்கு நாடக நடிகராக இருந்தார். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் 1970ல் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த வாசுதேவன்க்கு நடிகராகும் வாய்ப்பு கிட்டவில்லை. இருந்தும் 40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனுக்கான முகவெட்டு இல்லை. ஆனால் அவரின் குரல் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி க்கு பிடித்து போனதால் பின்னணி பாடகர் வாய்ப்பு தந்தார். அவரின் முதல் படமான மெட்ராஸ் டூ டெல்லி படம் வெளிவரவில்லை. இருந்தும் அவரின் குரல்க்கு உள்ள ஈர்ப்பு தன்மையை மனதில் கொண்டு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு தந்தார் எம்.எஸ்.வீ. திரையில் வந்த முதல் பாடல், பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற படத்தில் ஜீ.கே.வெங்கடேஷ் என்பவரின் இசையில் பாலு விக்கற பத்தம்மா என்ற கானா பாடல். அந்த கால கட்டத்தில் நண்பர்களாக கை கோர்த்தவர்கள் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர். மூவரும் ஒன்றாக தங்கியிருந்து வாய்ப்பு தேடினார்கள்.
1976க்கு பின் இசை சாம்ராஜ்யம் நடத்திய இளையராஜா வாசுதேவனுக்கு தான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்புகளை தந்தார். இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் மேடை பாடகராக பல மேடைகளில் ஏறி பாடி அக்குழுவிற்க்கு புகழ் சேர்த்தார்.
பாரதிராஜாவின் 16 வயதினிலேயேவில் மலேசியா வாசுதேவன் பாடிய ஆட்டுக்குட்டி மூட்டையிட்டு என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதேபோல் 25 ஆண்டுகளுக்கு முன்பு சகலாகல வல்லவனில், கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி என்ற பாடல் இன்றளவும் கிராமத்து ராக்கிங் பாடல். அதேபோல் அடி ஆத்தாடி………… என கடலோர கவிதைகள் படத்தில் பாடப்பட்ட அந்த வாய்ஸ் தான் அந்த படத்தின் உயிர் நாடியே.
பொன்மான தேடி பூவோடு வந்தன் என்ற காதல் பாடலும், முரட்டுக்காளையில் பொதுவாக என் மனசு தங்கம்……. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம் என்ற பாடலில் பொறந்த ஊருக்கு புகழைச்சேறு. வளர்ந்த நாட்டுக்கு பெருமை தேடு என பாடிய வரிகளுக்கு ஏற்ப அவர் பிறந்த மலேசியாவிற்க்கு புகழை சேர்க்க தன் பெயரோடு மலேசியாவை சேர்த்துக்கொண்டு மலேசியா வாசுதேவன் ஆனவர். வளர்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க தமிழகத்திலேயே தன் கடைசி காலம் வரை இருந்து மறைந்துள்ளார்.
குத்து பாட்டு முதல் தாலாட்டும் மெலோடி வரை தன் குரலால் தமிழகத்தை அசரடித்த மலேசியா வாசுதேவன்க்கு நிகர் அவரே. முதல் வசந்தம் படத்தில் குணசித்தர வேடத்தில் அறிமுகமாகி தன் நடிப்பு ஆசைக்கு பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டார். அதன் பின் வில்லன், காமெடியன், அப்பா என பல வேடங்களை தரித்து 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிப்போடு அவருக்கு வந்த இயக்குநர் ஆசை தான் அவரை படு பாதாளத்திற்க்கு கொண்டு சென்றது.
1991ல் புது முகங்களை வைத்து நீ சிரித்தால் தீபாவளி என்ற பெயரில் படம்மெடுத்தார். அதற்க்கு இசையமைக்க வேண்டும்மென அவரின் நண்பர் இளையராஜாவிடம் உரிமையாக கேட்டபோது, நீ தப்பு செய்யற. சுpனிமா தயாரிப்புங்கறது சூது, வாது நிறைஞ்சது. உனக்கு அது சரிபடாது. அதனால நீ படம்மெடுக்காதே என எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இளையராஜா இசையமைப்பில் எல்லா பாடல்களும் பிளாப், படமும் பிளாப். இதனால் ஏழ்மையின் கரையில் ஒதுங்கினார். கஸ்ட காலத்தில் அவருக்கு நண்பர்கள் கை கொடுத்து தூக்கி விட முன் வரவில்லை. வாய்ப்புகளும் படிப்படியாக குறைந்தது.
பிற்காலத்தில் பக்தி பாடல்களில் தன் கவனத்தை திருப்பினார். அதற்க்கு காரணம் அவரின் குரலில் வந்த பக்தி பாடல்களை மக்கள் விரும்பினர். குறிப்பாக கங்கைஅமரன் இசையில் கரகாட்டகாரன் படத்தில் மாரியம்மா…… திருசூலியம்மா என பாடிய பாடல் இன்றும் தமிழக கிராமங்களில் ஆடி மாத திருவிழா கால பாடல். ஆதனால் தைரியமாக பக்தி பாடல்களை பாடினார். வாசுதேவன்க்கு அதிலும் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி மலேசியா வாசுதேவன் புகழை பாடிக்கொண்டு போகலாம். இவருக்கு தமிழகரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இதுவரை தமிழில் 8 ஆயிரம் பாடல்களையும், பிற மொழிகளில் 5 ஆயிரம் பாடல்களையும் பாடியுள்ள வாசுதேவன் மதியம் நுரையில் நோயும், பக்க வாதமும் சுத்தமாக முடக்கியது சிகிச்சையில் இருந்தவர் கடந்த 20ந்தேதி மருத்துவமனையில் காலமானார்.
இவருக்கு உஷா என்ற மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி, பவித்திரா என்ற மகளும் உண்டு. மகன் துணை நடிகராகவும், மகள் பிரசாந்தினி பின்னணி பாடகியாகவும் தமிழ் திரையுலகில் உள்ளார்கள்.

மலேசியா    வாசுதேவன்அவர்களின்
பேட்டி...


மலேசியாவில் இருந்த வாசுதேவனைப்பற்றி சொல்லுங்கள்?
ஒரு காலத்தில் பிழைப்புக்காக இந்தியாவிலிருந்து கப்பலில் மலேசியாவுக்குக்குடியேறியவர்கள் மலேசிய தமிழர்கள். அப்படிதான் என்குடும்பமும் கிளாங்கில் குடியேறியது. அப்பா சாத்துநாயர், அம்மா அம்மாளு அம்மை. என் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள், 2 சகோதரிகள். ஒரு ரப்பர் தோட்டத்தில் தகப்பனார் வேலை செய்தார். குழந்தைப்பருவத்தையும், பள்ளிப்பருவத்தையும் ரப்பர் எஸ்டேட்டில்தான் கழித்தேன்.


உங்கள் இளமைக்காலம் எப்படி இருந்தது?
என் அப்பாவுக்கு நல்ல இசைஞானம் உண்டு. அவர் ஆர்மோனியத்தை வைத்துக்கொண்டு நன்றாக பாடுவார். அப்போது நான் எட்டு வயதுசிறுவன். ஆர்மோனியத்திற்கு பெல்லோஸ் தள்ளிவிடுவேன். அப்போதே என்னுடைய கலையார்வத்துக்கு பிள்ளையார்சுழி போட்டு விட்டார் அவர். பிற்பாடு பள்ளிப்படிப்பில் கவனம் செல்லவில்லை. கலையில்தான் மனம் லயத்தது.
தமிழகத்தைப்போலவே மலேசியாவிலும் அதிகளவு நாடகக்கலை வளர்ந்துவந்த காலக்கட்டம் அது. நானும் என் சகோதரர்களும் நாடகக்குழுவில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தோம்.
முரளிமோகன ஞான சபா, தேவர் நாடக கம்பெனி, ஆர்.பி.எஸ் .மணியம்நாடக கம்பெனி, முபன் புரடக்ஷன் நாடக கம்பெனிகள் இருந்தன. இவைகள் எல்லாம் எங்களை ஊக்கப்படுத்தின.
பின்னர் நானும் சகோதரர்களும் சேர்ந்து "எம்.எஸ்.வி' நாடகக்குழு மற்றும் இசைக்குழு நடத்திவந்தோம். மலேசியா முழுவதும் நாடகம் மற்றும் இசைக்கச்சேரி நடத்தி வந்


மலேசியாவில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது?


தமிழகத்தில் உள்ள பண்பாடு ,கலாசாரம், பழக்க வழக்க சடங்குகளைத்தான் மலேசிய தமிழர்களும் பின்பற்றுகிறார்கள். மலேசியாவில் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை என்றால் கொள்ளைப்பிரியம். பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் விவசாயிகள், உழவர்கள் கொண்டாடக்கூடியவிழா. தமிழகத்தைப் போல் மலேசியாவில் விவசாயமோ, உழவர்களோ அதிகம் கிடையாது.அவர்கள் தமிழக உழவர்களை மனதில் வைத்துதான் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் குடும்பத்துக்குள் கொண்டுகிறார்கள். கிராமத்தில் அதிகம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, ஏனோ பட்டணங்களில் அவ்வளவு விமர்சையாகக்கொண்டாடப்படுவதில்லை. ஆனால், மலேசியாவில் பட்டணத்தில்தான் அதிகம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஊர்மக்கள் எல்லாம் ஒரு பொது இடத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து கூட்டாக மகிழ்சியாக சேர்ந்து கொண்டாடுவார்கள். அன்று விருந்து, உபச்சாரம், புத்தாடைகள் என தடபுடலாக இருக்கும். மலேசியாவில் பொங்களை தமிழர் பண்டிகையாகத்தான் கொண்டாடுகிறார்கள். நான் சிறுவயதில் கொண்டாடிய பொங்கல் திருநாளைப் போல் ஒரு நாள் எங்கும் கண்டதில்லை. அந்தப் பூரிப்பான பொங்கல் பண்டிகை சந்தோஷங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. மலேசிய பொங்களைப் போல் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கும் கண்டதில்லை. காணப்போவதுமில்லை.


தமிழகத்திற்கு வந்தது எப்படி?


எனக்குள் தீரா ஆசை ஒன்று இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று.
1968ல் முபன் புரடக்ஷன் நாடகக்குழு தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையில் நாடகம் நடத்தவும்,"ரத்தபேய்' என்ற படம் எடுக்கவும் தமிழகத்துக்கு வந்தது. ரத்தப் பேயில் நானும் நடித்தேன். அந்தப்படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையில் "பொல்லாத உலகில் போராட்டம்' என்று ஒருபாடலும் பாடினேன். அதுதான் என் சினிமாவுக்கான முதல்பாடல். அந்தப்படம் அப்போது எதிர்ப்பார்த்தளவு போகவில்லை.
அதன் பின்னர் 10 ஆண்டுகள் சிரமப்பட்டேன். இளையராஜா, கங்கைஅமரன், பாஸ்கர் இசைக்குழுவில் பாடிவந்தேன். ஆரம்பகட்டத்தில் இளையராஜாதான் ஒவ்வொரு கம்பெனியாக எனக்கு வாய்ப்பு வாங்கிதந்தார். எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ் ஆகியோர் எனக்குப் பெரிதும் உதவினர்.


சினிமாத்துறையில் உங்கள் பங்கு?
5 ஆயிரம் பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடியிருக்கேன்,6 படங்களுக்குமேல் இசையமைத்து இருக்கேன். " நீ சிரித்தால் தீபாவளி' என்றஒருபடத்தை கதை,வசனம் எழுதி, இயக்கி இருக்கேன். 85 படங்களுக்கு மேல் நடித்து இருக்கேன்." எண்ணம் தோன்றியது எழுத்த துõண்டியது' கவிதை நுõல் எழுதியிருக்கேன்.


மறக்க முடியாத அனுபவம்?
என்றும் மறக்க முடியாத சில அனுபவங்கள் எனக்கும் உண்டு. அது 1970ம் ஆண்டு. அப்ப நான் சினிமாவில் ஒரே ஒரு பாட்டுத்தான் பாடியிருக்கேன். இசைக்குழுவில் பாடிவந்த காலம். ஒரு நாள் மயிலாப்பூரில் ஒரு இசைக்கச்சேரி. நானும் கங்கை அமரன் குழுவும் ரிகர்சல் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலை ஆறுமணிக்கு கச்சேரிக்கு போகணும். ரூமுக்கு வந்து குளித்து, உடையணிந்து வெளியே வந்ததுபோது என் பெயருக்கு ஒரு தந்தி வந்தது. வாங்கிப்பார்த்தேன். என்னை பெற்ற அம்மா காலமாகிவிட்டார் என்று இருந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை. கச்சேரிக்கும் என்னைவிட்டால் வேறு ஆள் இல்லை. தந்தியை வாங்கி மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கச்சேரியில் பாடப்போனேன். கச்சேரி முடிந்ததும் கங்கை அமரனிடம் தந்தியைக்காட்டி விவரம் சொல்லியழுதேன். கங்கை அமரன், "" இவ்வளவு பெரிய துக்கத்தை சுமந்துக்கொண்டு எப்படி பாடினாய்?'' என்று வாரியணைத்து அழுதார். உடனே மலேசியா சென்று அம்மாவைப் பார்க்கும் சூழ்நிலைஇல்லை. அதுபோல் மலேசியாவில் இருக்கும் என் சகோதரர்கள் இறப்பு ஒன்றுக்குக் கூட போனதில்லை. இந்த துயரம் இன்னமும் என் நெஞ்சில் நீங்காதமனப்புண்ணாய் இருக்கிறது.
இன்னொரு சம்பவம் மலேசியாவில் நடந்தது. ஒரு மேடையில் நான் பாடிக்கொண்டிருந்தேன். சகோதரர்கள் ஆர்மோனியமும், மிருதங்கமும் வாசித்துக்கொண்டிருந்தார்கள். பாடும் போது ஒருவரியில் தாளம் தவறிபாடிவிட்டேன். என் அண்ணன் எழுந்து வந்து மேடையிலேயே விட்டார் கன்னத்தில் ஒரு அறை. அந்த அறைதான் இன்று என்னை இந்தளவுக்கு உயர்த்திருக்கிறது. அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதவை.



உங்கள் குடும்பம் பற்றி?
வாத நோய் வந்து படுத்தப்படுக்கையில் இருந்தபோது ஒரு குழந்தையாக என்னைப் பார்த்துக்கொண்ட அன்பு மனைவி உஷா. எங்கள் இருவருக்கும் பிறந்த இரு மகள்; ஒரு மகன். பெரியவள் மலேசியாவில். சின்னவள் என் இசையின் அடுத்தவாரி. மகனும் சினிமா, டி.வி என்று கலைத்துறையில் முன்னேறிகொண்டிருக்கிறார்.


உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது?
என்னை பெற்றது மலேசியா. தத்து எடுத்தது தமிழகம். வாழவைத்தது தமிழ் மொழி. என்னை இந்தளவுக்கு இசை ஏணியில் உயர்த்திய தமிழர்களை வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டேயிருப்பேன்



இதோ அவர் நடித்த அருமையான் பாடல்..






பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மறைவு இசையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவரது இசைக்குடும்பத்தை சேர்ந்த பலரும் தங்கள் சோகத்தை பகிர்ந்து கொண்டார்கள். அவற்றிலிருந்து-

டி.எம்.சௌந்தர்ராஜன்

"மலேசியா வாசுதேவன் நல்ல பாடகர் மட்டுமல்லசிறந்த நடிகர் என்றும் பெயர் பெற்றவர். என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

மலேசியாவில் ஆண்டுதோறும் எனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். கடந்த ஆண்டு கோலாலம்பூரில் எனது பிறந்தநாள் விழா நடைபெறுவதாக தெரியவந்ததும்அந்த நிகழ்ச்சிக்கு தானே தலைமையேற்பதாகப் பெருந்தன்மையுடன் கூறினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னை மனதாரப் பாராட்டினார். தொடக்க காலத்தில் என் பாடல்களைப் பாடித்தான் பிரபலமானதாகப் பல பேட்டிகளில் அவர் பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார். என் பாடல்களைப் பாடி பயிற்சி பெற்று ஒரு அற்புதமான பாடகர் உருவானதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நல்ல குரல் வளம் கொண்ட அவருக்குப் பலவிதமான பிரச்சினைகள் இருந்தன. சொந்தமாக ஒரு திரைப்படம் தயாரித்ததில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களுடைய நாட்டிலிருந்து தமிழகம் சென்று மலேசியத் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் மலேசிய வாசுதேவன் என்றுமலேசியத் தமிழர்கள் பெருமையுடன் நினைத்துப் பூரித்துப் போயிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை இழந்து தவிக்கும் மலேசியத் தமிழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய நடிகர் சங்கமும்தமிழக அரசும் மலேசியா வாசுதேவனின் குடும்பத்தாருக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

வாணி ஜெயராம்

இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. காரணம்,ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் அவரும் நானும் சேர்ந்த சன் தொலைக்காட்சியில் வரும் சங்கீத மகா யுத்தம் நிகழ்ச்சியில் நடுவர்களாகப் பங்கேற்றோம். ரொம்ப உற்சாகமாக இருந்தார். பக்கவாதத்தால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. எனவே தன்னை மேடையில் பாட வருமாறு அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நிகழ்ச்சியில் பாடிய பாடகர்களைப் பற்றியும்பாடல்கள் குறித்தும் அருமையான கருத்துக்களைத் தெரிவித்தார். "என் பக்கத்தில் சாட்சாத் சரஸ்வதி தேவியே அமர்ந்திருக்கிறார். வாணிஜி ரொம்ப சிறந்த பாடகி" என்று அவர் என்னை வாழ்த்தியதை மறக்கவே முடியாது. அவருடன் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியைப் பற்றிய நினைவலைகள் என்றும் என் மனதில் நீடித்திருக்கும். பக்கவாதம் உள்ளிட்ட எந்த நோயும் அவரை எதுவும் செய்துவிட முடியாது என்று நம்பிக் கொண்டிருந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து நான் விடுபட பல காலம் ஆகும்.

சித்ரா

மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்லபழகுவதற்கு நல்ல மனிதர் மலேசியா வாசுதேவன். கடந்த மாதம் பத்மபூஷன் விருது பெற்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு,பாடகர் மனோ ஒரு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது சற்று தடுமாறி நடந்தாரே தவிரஎல்லாரிடமும் தனக்கே உரிய உற்சாகத்துடன்தான் பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் பேச முடியவில்லை. வணக்கம் மட்டும் தெரிவித்தேன். அதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, "எப்படி இருக்கீங்கம்மா... குழந்தை,கணவர் எல்லாரும் நலமா இருக்காங்களா?" என்று பாசத்துடன் விசாரித்தார். அவரது மறைவு தமிழ் இசையுலகத்திற்கு பெரும் இழப்பு.

மனோ

என்னை முதன் முதலாக சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதே அவர்தான். 1986ம் ஆண்டு ஒருநாள் என்னைத் திடீரென்று தொடர்பு கொண்டு,சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் நீங்களும் பாடப் போகிறீர்கள்தயாராக இருங்கள் என்றார். அவரைப் போன்ற சிறந்த பாடகர் கிடைப்பது அரிதிலும் அரிது. மிகவும் நட்பாகப் பேசிப் பழகுவர். சக கலைஞர்களை எந்தவிதமான தயக்கமும் இன்றி வெளிப்படையாகவும் மனதாரவும் பாராட்டக்கூடிய நல்ல மனிதர் அவர்.

மலேசியா வாசுதேவன் அவர்களின் சுகராகங்கள்...








இப்படி பாடகர்களையே தனது ரசிகர்களாக்கி கொண்ட மலேசியா வாசுதேவன் இயற்கையுடன் இறந்தாலும் நம் இதயத்தில் என்றுமே அவர் இறப்பதில்லை....



Tell a Friend

2 comments:

  1. அருமையான ஒரு பின்னனி பாடகரை இந்த இசை உலகம் இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்..

    ஆவரது இரங்கலுக்காக பாடும் நிலா பாலு தளத்தின் சிறப்பு அதிவை காண கீழிருக்கும் சுட்டியை கிளிக் செய்யவும்...

    http://maduraispb.blogspot.com/2011/02/097.html

    Regards,
    Madurai Arun

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...