இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா கடும் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 60. ஜீவாவின் உடல் அவர் பிறந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்லபட்டது. . அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
இளையராஜாவின் உயிர் நாடியாக திகழ்ந்தவர் ஜீவா. அவரது இசைப் பயணத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாக விளங்கியவர். இளையராஜாவின் ஜீவனாக வாழ்ந்து வந்த ஜீவா, இளையராஜாவின் உற்ற துணையாக விளங்கினார்
ஜீவாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஜீவா. அதிலும் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் அவர் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் இருந்து வந்தார். சமீபத்தில்தான் யுவனுக்கு 2வது கல்யாணம் நடந்தது. இதனால் பெரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தார். தான் அதிகம் பாசம் வைத்த 2வது மகனின் வாழ்க்கை பூர்த்தி ஆனதைப் பார்த்து விட்டு அவர் கண் மூடியிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
ஜீவாவின் மரணத்தின்போது இளையராஜா அருகில் இல்லை. அவர் திரைப்படப் பாடல் பதிவுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். தகவல் அறிந்ததும் அவர் சென்னை விரைந்து வந்தார். அவரைப் பார்த்ததும் அவரது குழந்தைகள் கதறியழுதனர்.
ஜீவாவின் மரணச் செய்தி திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவைப் பார்த்ததும் இளையராஜாவின் மகள் பவதாரணி கட்டிப் பிடித்து கதறி அழுதார். அவரைப் பார்த்தி பாரதிராஜாவும் கண்ணீர் விட்டு அழுதார். வீடே பெரும் சோகமாக காணப்படுகிறது.
வைரமுத்து-லதா ரஜினிகாந்த் அஞ்சலி
பல வருடங்களாக இளையராஜாவுடன் பேசுவதை நிறுத்தி விட்ட கவிஞர் வைரமுத்து ஜீவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டுக்கு வந்தார். ஜீவாவுக்கு அஞ்சலி செலுத்திய அவர் அருகில் நின்றிருந்த இளையராஜாவிடம் சென்று ஆறுதல் கூறினார். அதேபோல யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோருக்கும் அவர் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், கவிஞர் வாலி, பின்னணிப் பாடகர் மனோ, நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
தலைவரின் உழைப்புக்கும் உயர்வுக்கும் உறுதுணையாக இருந்து தன் வாழ்க்கையையே இசைக்காக அற்பணித்து
கொண்ட அம்மையாரின் தியாகம் ஈடு இணையில்லாதது.
அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையவும்...அவரின் பிள்ளைகள் பற்றிய எதிர்கால கனவுகள் நிறைவேரவும்...
தலைவருக்கு ஆறுதலையும் மன தைரியத்தையும் அளிக்க எல்லாம் வல்ல கடவுளிடம் வேண்டுகிறோம்
No comments:
Post a Comment