ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் கிரியேஷன்ஸ் மற்றும் இளையராஜா மூவீஸ் சார்பில் அவர் தயாரித்தவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். முதல் தரமானவையும்கூட. வெற்றியின் உச்சம் என்றால் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாதி ராஜா எனலாம்.
ஆனால் சில ஆண்டுகளாக தயாரிப்பை நிறுத்தி வைத்துவிட்ட ராஜா, மீண்டும் தயாரிப்புப் பணிகளில் இறங்க முடிவு செய்திருக்கிறார். அமிதாப்பின் "பா" பட உரிமை கூட அவரிடம்தான் உள்ளது.
இந்த நிலையில் விநியோகஸ்தராகவும் மாறியிருக்கிறார் இசைஞானி, செங்காத்து பூமியிலே படம் மூலம்.
இந்தப் பட விநியோகத்துக்கென்றே இளையராஜா ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். பெயர் சுவாமி கிரியேஷன்ஸ்!
இதுபற்றி இயக்குநர் ரத்னகுமார் கூறுகையில், தென் மாவட்டங்களில் நடக்கும் சம்பவங்களையும், வாழ்க்கை முறைகளையும் இந்தப் படத்தில் வித்தியாசமான கோணத்தில் படமாக்கியிருக்கிறோம். மனித உறவுகள் பற்றிய உணர்வையும், உறவுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளையும் பதிவு செய்திருக்கிறோம். பவன், செந்தில், சிங்கம் புலி, அழகன் தமிழ்மணி, வெள்ளையாண்டி தேவர், ராஜதுரை ஸ்டாலின், பிரியங்கா, சுனுலட்சுமி, டி.கே.கலா, அஞ்சலி தேவி ஆகியோருடன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 100 புதுமுகங்களும் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள், என்றார்.இந்தப் படத்தை பார்த்த இளையராஜா, தனது கைப்படி ஒரு வாழ்த்தினை எழுதி இயக்குநரிடம் கொடுத்திருக்கிறார்.
பட்டி தெட்டி மட்டுமில்ல…
நாடு நகரம் மட்டுமில்ல…
பாரத நாடு மட்டுமில்ல…
உலகம் எங்கும்
உயிர் கொலையைக் கண்டிக்கும் ஒரே திரைப்படம்
செங்காத்து பூமியிலே!
- என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்திருக்கும் இளையராஜா, முதலில் இப்படத்திற்கு இசையமைக்க யோசித்தாராம். 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு வாருங்கள். படத்தைப் பார்த்து விட்டு இசையமைக்கிறேன் என்று இசைஞானி சொன்னதையடுத்து, 10 நாள் ஷூட்டிங் முடித்து அதனை போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர். காட்சியமைப்புகள் பிடித்துப் போனதால் இசையமைக்க சம்மதித்திருக்கிறார் இளையராஜா. இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார். படத்திற்கு சென்சார் ‘யு’ சான்றிதழ் அளித்து மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள்.
"நல்ல சினிமாவை உற்சாகப்படுத்தவே இந்த முயற்சி" என்று ரத்தினச் சுருக்கமாக விளக்கமும் தந்துள்ளார் ராஜா.
பகிர்வுக்கு நன்றி தல ;)
ReplyDeleteநன்றி எல்லாம் எதுக்குங்க கோபிநாத்....... நீங்க வந்தாலே போதும்..
ReplyDelete